நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பால் தபால் சேவை முடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தால் தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன.

நிர்வாக ரீதியாக தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை, ஊழியர் சட்டமூலத்தை திருத்தி நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலே குறித்த அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வடக்கு, கிழக்கு, தலைநகர் கொழும்பு மற்றும் மலையகம் என நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக வவுனியாவில் சகல தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தபால் நிலையத்திற்கு சேவைகளை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பியுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் தபால் சேவை இயங்காததால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் இப் போராட்டம் தொடர்கின்ற நிலையில், மலையக பகுதிக்கு வந்த தபால் பொதிகள் யாவும் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

மேலும், மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட தபால் நிலையங்கள், உப தபால் நிலையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளதால் தபால் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் புத்தளம்,மாத்தறை மன்னாரிலும் சகல தபால் நிலையங்களும் மூடப்பட்டு, தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரியவருகின்றது.

இன்று அதிகாலை 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை, 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்படவுள்ளது. இதனையடுத்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 26ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்படுமென தபால் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts