தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு
கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் படுகொலையை அரங்கேற்றிய பின்னர் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் தமிழகத்தையும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்த வகையில் நீதியை கோரி நடைபெற்று வருகின்றது.
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்திற்கு வல்லரசு நாடுகள் தெரிந்துகொண்டே துணைபோயிருந்தார்கள் என்பதனையும், போர் முடிவுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெறுமனே வல்லரசுகளின் நலன்களை பேணக்கூடிய வகையில் ஸ்ரீலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் குறுகிய நோக்கத்துடன் மட்டுமே நிறைவேற்றப்பட்டன என்பதனையும், ஐ.நா.ம.உ .பேரவையில் துணிந்து அம்பலப்படுத்தி தமிழருக்கான நீதிக்கான போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பவர்களில் தமிழகத்திலிருந்து எமக்காக குரல்கொடுக்கும் ஈழ உணர்வாளர்களில் திருமுருகன்காந்தி அவர்களது பங்கும் பணிகளும் மிகவும் இன்றியமையாதது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலையாளிகள் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் தண்டிக்கப்படல் வேண்டும், தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளில் தொடர்ச்சியாக உறுதியாக இருந்து தமிழக மட்டத்திலும், ஐ.நா மட்டத்திலும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒன்றிணைந்தவாறு திருமுருகன்காந்தி மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் மிகமுக்கிய செயற்பாடுகளாகும்.
போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்காக கடந்த 8 ஆண்டுகளாக ஒன்று கூடும் தாயக, தமிழக, புலம்பெயர் உறவுகள் அவ்விடத்தில் தமக்கான நீதி கிடைக்க வேண்டுமென உறுதியெடுத்துக் கொள்கின்றார்கள். அந்த உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து ஐ.நா மன்றைநோக்கி அவர்கள் தீவிரமாக நீதிகோரி குரல் எழுப்புகின்றார்கள். இந்த வகையில் நினைவு கூரல் என்பது தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் முக்கிய இயங்கு சக்தியாக விளங்குகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடிவரும் திருமுருகன்காந்தி அவர்கள் கடந்த மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழக மெரீனா கடற்கரையில் நிகழ்த்தியமைக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழ் மக்களுக்காக ஓய்வுறக்கமின்றி போராடிவருபவர்களில் ஒருவரான திருமுருகன்காந்தி அவர்களது விடுதலைக்காக போராட வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும். எனவே அவரது விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
திகதி: 08-06-2017 வியாழக்கிழமை
நேரம்: மு.ப 10.00 மணி
இடம்: யாழ் பேருந்து நிலையம் முன்பாக.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தொடர்பு:
இல.16, மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம். 0773024316