தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
மேலும் அந்தோனி லம்பட் கூறுகையில், மக்கள், கடந்த சித்திரை மாதம் 29ஆம் திகதி வாக்குறுதி வழங்கப்பட்ட போதும், கடந்த 35 நாட்களுக்கு மேலாக மக்கள் சொந்த நிலத்திற்கு செல்ல இயலாமல் வீதியில் கிடப்பதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து படையினரால் வெளியேற்றப்பட்டோம்.
அன்று தொடக்கம் இன்று வரையும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் வாழ்ந்து வருகின்றோம். இதற்கிடையில் பல போராட்டங்களை நடத்தியதுடன் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கும் எமது பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தோம்.
எனினும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பங்குனி மாதம் 23ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் இணைந்து ஒரு போராட்டத்தை ஒழுங்கமைத்து தொடர்ச்சியாக சித்திரை மாதம் 29ஆம் திகதி வரை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் 29ஆம் திகதி 38 ஆவது நாள் போராட்டத்தின்போது கடற்படை தளபதி மற்றும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள், கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டு கடற்படையினரின் வசம் உள்ள காணிகள் 3 நாட்களுக்குள் மக்களிடம் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என கூறினார்.