கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய மாணவியின் சகோதரன், ஆசிரியரின் செயற்பாட்டில் சந்தேகமடைந்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, மாணவியையும் ஆசிரியரையும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாணவியை கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பொலிஸார், ஆசிரியரை தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நேற்று எங்கும் கருத்தரங்குகள் நடைபெற வில்லை எனவும் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் கூறினர்.
ஆனால் குறித்த சம்பவத்தினால் கடும் ஆத்திரமடைந்துள்ள மாணவியின் பெற்றோர்கள், ஆசியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முன் கோஷமிட்டுள்ளனர்.