உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது யாழ்ப்பாணத்தை மூலோபாய முறையில் அபிவிருத்தி செய்து அந்த சூழலை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது சம்பந்தமாகவும், நகர பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவது சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
சரியான சூழல் மதிப்பீடுகள் இன்றி மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் காரணமாக அனர்த்தங்கள் அதிகரித்துள்ளன. தெற்கு அதிவேக வீதி அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணமும் இதுவே.
அத்துடன் பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்க முடியாமல் போவது பாரிய பிரச்சினையாகும். மக்கள் பாதுகாப்பிற்காக நிலையான மக்கள் மையத்தை கட்டியெழுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.