பாட்ஷா படத்துக்கு முன்பு வரை ரஜினி படங்களின் உருவாக்க முறையே வேறு. படங்கள் அறிவிக்கப்படும். முதல் நாளே படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகும். பின்னர் குறித்த இடைவெளியில் சில ஸ்டில்களை பிஆர்ஓக்கள் தருவார்கள். அடுத்து படம் வெளியாகும்.
முத்து படத்துக்குப் பிறகு படங்களின் ஸ்டில்களை வெளியிடுவதில் கெடுபிடி காட்டினர். குறிப்பாக பாபாவில் அனுமதியின்றி எந்தப் படமும் வெளியிடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பின்னர் ஷங்கர் வந்தார். அவர் படங்களுக்கு தலைப்பு வெளியாவதோடு சரி. ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவே ஆண்டுக் கணக்கில் ஆகும். படம் வெளியாவதற்கு சில வாரங்கள் முன்புதான் ஸ்டில்கள் வெள்ளமாகப் பாயும்.
இதை மாற்றியவர் பா ரஞ்சித். கபாலி படம் பூஜையிலிருந்து மலேசியாவில் ஷூட்டிங் நடந்து முடியும் வரை, எந்தத் தங்கு தடையும் இல்லாமல் ஸ்டில்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
இப்போது காலாவிலும் அதே கதைதான். படத்தின் தலைப்பு வெளியான அன்றே ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அடுத்த சில தினங்களில் மும்பையில் ரஜினி நடித்த காட்சிகளின் ஸ்டில்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் மக்களுடன் இருக்கும் காட்சிகள் முழுவதும் உடனுக்குடன் வெளியாகி வருகின்றன.
இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், ‘படம் முழுவதையும் இப்படியே ரிலீஸ் பண்ணிடுவாங்களோ?’ என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது.
இதனை அதிகரிக்கும் வகையில், காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனமும் லீக் ஆகியுள்ளது.
அதில், “நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு!” என ரஜினி தன் காந்தக் குரலில் கர்ஜிக்கிறார்.
படம் லீக்காகாம பாத்துக்கங்க காலா டீம். அதான் முக்கியம்!