நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது; ’நாட்டில் கடந்த கால யுத்தத்தின் காரணமாக இன்றும் கூட நாம் அதன் வடுவில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். கடந்த ஆட்சிக் காலமானது அடக்குமுறையான ஆட்சிக் காலமாகும். அவ் ஆட்சிக் காலத்தில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்ததுடன் கொலை, கொள்ளை கப்பம் என நாடு சீரழிந்திருக்கிறது.
தற்போது அந் நிலமையானது மாற்றப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் நாட்டில் ஒற்றுமையான ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையை பயன்படுத்தி பெண்கள் தமது திறமையினை வெளிக்கொண்டுவர வேண்டும். ஆனாலும் பெண்களது பிரதிநித்துவத்தை அதிகரிப்பதில் பல பிரச்சனைகள் உண்டென்பதும் உண்மையே. குறிப்பாக பெண்களது பிரதித்துவமானது கட்சியிலேயே புறக்கணிக்கப்படுகின்றது.
தற்போது பிரதமர் ரணில், மாவட்டத்திற்கு 25வீதம் பெண்கள் என்ற கோட்டா முறையை கொண்டுவந்து அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். இதனை பயன்படுத்தி பெண்கள் தமது பிரதிநித்துவத்தை அதிகரித்துகொள்ள வேண்டும்.’ என்றார்