காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன.
காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்து இறைத்த போது கிணற்றினுள் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிகள் கண்டு மீட்கப்பட்டன.
அதனை கேள்வியுற்ற அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகளை கழட்டி எடுத்து சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 2003 ஆண்டின் பிற்பகுதிகளில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த இந்திய தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களான ரி.வீ. எஸ். ரக மோட்டார் சைக்கிள் , மற்றும் பஷன் ப்ளஸ் ரக மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.
குறித்த பிரதேசம் 1990களுக்கு முன்னரே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இருந்த பிரதேசமாகும். அந்த பகுதிக்குள் மக்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாகும். அவ்வாறான நிலையில் குறித்த இரு மோட்டார் சைக்கிளும் அப்பகுதி கிணற்றினுள் எவ்வாறு போடப்பட்டன எனும் கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஆகவே இவை இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களாக இருக்கலாம் எனும் சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டவை தொடர்பில் காங்கேசன்துறை போலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர் முறைப்பாடு செய்ய சென்ற போது அது தொடர்பில் முறைப்பாடு செய்ய தேவையில்லை என காணி உரிமையாளரை போலீசார் திருப்பி அனுப்பி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.