நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் பௌத்த விகாரை பிரதேச சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரா அமைக்கப்படுகிறது என ஆராயுமாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவரசா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடை பெற்றிருந்தது.
இதன்போது விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு முன்மொழிந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவரசா,
நாவற்குழி பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 14ஆம் திகதி நாட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அவ்வாறான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான கட்டட வரைபட அனுமதி சாவகச்சேரி பிரதேச சபையிடம் பெறப்பட்டிருக்கவில்லை என்பதை ஆராய்ந்து அறிந்துள்ளேன். இந்நிலையில், உள்ளூராட்சி அமைச்சரும் என்ற வகையில் முதலமைச்சர் இது தொடர்பாக ஆராயுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாவற்குழி விகாரை உரிய அனுமதி பெறப்பட்டா கட்டப்படுகின்றது என்பது தொடரில் நிச்சயம் ஆராய்வோம் எனவும் இதே போன்றே முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைக்கப்படுகின்றதென தெரிவித்தார்.
அதேவேளை நேற்று (வியாழக்கிழமை) தென்னிலங்கையில் இருந்து 300 பௌத்த பிக்குகள் நாவற்குழிக்கு வந்து பௌத்த சமய வழிப்பாட்டில் ஈடுபட உள்ளதாகவும் , எனக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிந்து கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவைத்தலைவர் , நாவற்குழி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமம். அங்கே புதிய சிங்கள கிராமம் ஒன்று தற்போது உருவாகி வருகின்றது. அது எமக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றது என தெரிவித்தார்.