கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத் திட்டத்திற்கு அமைய பயணி ஒருவர் தனது கைப் பையில் கொண்டு வரக் கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
நீர், குடி பாணங்கள், சூப், ஜேம், சோஸ் வகைகள், நீராவி திரவ வகைகள், ஜெல் வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள் உள்ளிட்ட பல இதில் அடங்குகின்றன.
இதுபோன்ற அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதிகமாகக் கூடாது எனவும், அனைத்து திரவ கொள்கலன்களும், 20×20 என்ற அளவிலான வௌிப்படையாக தெரியும், திறந்து மீள மூடக்கூடிய வகையிலான பொலித்தின் பைகளில் போடப்பட்டிருக்க வேண்டும் எனவும், எச்.எஸ்.ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற பை ஒன்றை மாத்திரமே பயணி ஒருவர் கொண்டு செல்ல முடியும்.
இதற்கு மேலதிகமாக கொண்டு செல்ல விரும்புபவர்கள் அதனை விமான டிக்கட்டை ஒப்படைக்கும் இடத்தில் கொடுக்கப்படும் பைகளுடன் சேர்த்து எடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.