“யாழ்ப்பாணத்தினை, இவ்வருட இறுதிக்குள் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைத்து மூலோபாய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்திகள் தொடர்பாக நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தினை மூலோபாய நகரமாக மாற்றி அபிவிருத்தியடையச் செய்வதே எமது இலக்காகும். இதற்கு பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை அறியும் நடவடிக்கைகளை எமது அமைச்சினது பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர்.
யுத்தகாலத்தில் பெருமளவான மக்கள் யாழ்ப்பாணத்தினை விட்டு வெளியேறிச் சென்றதால் யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. எனினும் தற்போது வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முன்னேற்ற நிலைமைகள் காணப்படுவதால் விவசாயம், சிறுகைத்தொழில் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.