கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில் ஒன்று காணப்பட்டு வந்திருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணியை பிள்ளையார் கோவிலுக்கு வழங்கியிருக்கின்றார்.
பிள்ளையார் கோவிலும் கிழக்கு திசையாக வீதியை பார்த்த படி சிறியளவில் அமைக்கப்பட்டு பொது மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த நிலையில் 2009 இற்கு பின்னர் மீள் குடியேற்றத்தில் கிருஸ்ணபுரம் கிராமத்திற்கு மக்கள் வருகைதந்த போது பிள்ளையார் இருந்த அரச மரத்திற்கு கீழ் புத்தர் இருப்பதனையும் பிள்ளையார் கோவில் காணியில் சிறிய புத்த கோவில் இருப்பதனையும் மக்கள் அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருந்த போதும் எவரிடம் எதுவும் பேச முடியாத நிலையில் கடந்த எட்டு வருடங்களாக அமைதியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிள்ளையார் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டு அதே காணியில் புத்த கோவிலுக்கு அருகில் வடக்கு திசையினை பார்த்தப்படி சிறியளவில் பிள்ளையார் ஆலயம் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை பார்த்திருந்த பிள்ளையார் வடக்கு திசைக்கு திருப்பப்பட்டுள்ள நிலையில் புதிதாக வந்த புத்தபெருமான் கிழக்கு திசையில் வீதியை பார்த்தப்படி காட்சியளிக்கின்றார்.
எனவே தங்களின் பிள்ளையார் இருந்த அரச மரம் தற்போது புத்தரின் கட்டுப்பாட்டில் இருப்பதனாலும் அங்கு பெரிய புத்தர் சிலை ஒன்று காணப்படுவதனாலும் மீண்டும் அந்த இடம் பிள்ளையாருக்கு கிடைப்பது சாத்தியமற்றது என தெரிவிக்கும் பொது மக்கள் தங்களின் பிள்ளையார் ஆலயத்தை மீண்டும் ஆகம விதிப்படி கிழக்கு திசைக்கு மாற்றி அமைப்பதற்கு பல தடவைகள் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திய போதும் செய்து தருவதாக கூறியும் இது வரை அமைத்து தரவில்லை எனவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.