இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழர் தாயத்தில் மட்டுமன்றி தமிழ் மக்கள் விரவி வாழும் தேசமெங்கும் இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
”எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்’ என ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வடக்கு மாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வு, திட்டமிட்டவாறு இன்று காலை 9.30 மணியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும் என்றும் ரவிகரன் குறிப்பிட்டார்.