“தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாங்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். நாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைக்காக செயற்படுபவர்கள்” என வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்ற (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றன. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் 5 பேருடன் விளக்கு ஏற்றுவதாகவும், அவர் தொடர்ந்து படையினருக்கு எதிராக ஒவ்வொரு நாளும் பிரசாரம் செய்வது கவலையளிக்கின்றது என்றும் அதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே நாங்கள் 5 பேருடன் விளக்கு ஏற்றுவது அவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது எங்களுக்கு வெற்றிதான். ஆகவே நாங்கள் எல்லா பதிலடியையும் எதிர்நோக்க தயார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 1974 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் 5 பேருடன் தான் போராட்டத்தினை ஆரம்பித்தார்.
எனவே எங்களை கொச்சைப்படுத்தவோ அச்சுறுத்தவோ வேண்டாம். எல்லாவற்றையும் சந்திக்கத் தயார்” என வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.