பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து, பாடசாலையினால் அறவிடப்படும் தொகை தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தன்னிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சில பாடசாலைகளில் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் மாணவர்களிடம் அறவிடப்படும் பணம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி அறிக்கையைத் தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக, பாடசாலை அபிவிருத்திக்கென எவரேனும் பணம் திரட்டுவார்களாயின், அதற்கு கல்வி அமைச்சின் செயலாளரோ அல்லது கோட்டக் கல்வி வலயத்தின் செயலாளராலோ, அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியது.

அவ்வாறின்றி, பாடசாலை மாணவர்களிடம் பணம் அறிவிடுவதற்கு, உரிய அதிகாரிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts