யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கினை கொழும்பிற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ள நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக மாணவர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் படுகொலை வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், மேற்படி வழக்கினை கொழும்புக்கு மாற்றுமாறு கோரி சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்.மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன்போது, குறித்த மனுவிற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, குறித்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வழக்கில் முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகரின் தலையீடு குறித்து பாதிக்கப்பட்ட தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என இன்றைய தினம் மன்றில் தான் அதிருப்தி வெளியிட்ட நிலையில், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.