வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், “வடக்கு மாகாண மக்களுக்கு என 6 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகரம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்கள். எங்களிடம் கேட்காமல் இவ்வாறு வீடுகள் அமைப்பதை நிறுத்துங்கள் என நான் தெரிவித்திருந்தேன். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உடனடியாக மக்களுக்கு வீடுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்கள்.
ஆகவே, அவர்களின் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்க தேவை உள்ளது என கூறினார்கள்.
எனினும், எங்களிடம் பொறியியலாளர்கள் உள்ளார்கள், அவர்களை கொண்டு வீடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என திட்டமிட முடியும்.
ஆகவே, இவற்றை பரிசீலிக்காது தான்தோன்றி தனமாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியிருந்தேன். இது அமைச்சரவை தீர்மானம் எனவும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறப்பட்டது. இருந்தபோதிலும், நான் யாழ்ப்பாணம் சென்றவுடன் எமது அமைச்சரவையுடன் பேசி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறியிருந்தேன்” எனவும் அவர் தெரிவித்தார்.