தமிழ் மக்கள் வேதனையிலுள்ள நிலையில், இன அழிப்பிற்கு துணை போனவர்களுடன் இணைந்து அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது என வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்ற (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
“இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பு வாரம் தமிழ் மக்களுக்கு துக்கமான வாரமாக அமைந்துள்ளது.
இன அழிப்பிற்கு துணை போன நாடுகள் இதுவரை எவ்வித பிரயாசித்தமும் தேடாமல் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கைக்கு வந்துள்ள இந்திய பிரதமருடன் இணைந்து அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில், நீதி கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்” என கோரினார்.