ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாள்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஆறாத் துயர் நிறைந்த நினைவேந்தல் வாரத்தை, ஒற்றுமையாகவும் – வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இறுதிக் கட்டப் போரின் போது, மூன்று லட்சம் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு – மருந்து உதவிகள் எதுவுமின்றி அந்தரித்து, குண்டு வீச்சுக்களால் சாவடிக்கப்பட்டு கொடூரமான முறையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி நாள்கள் இவை.
மக்கள் கூட்டாக மடிந்த இந்த நாள்கள், ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக ஈழதேசத்திலும் – புலத்திலும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மே 12 ஆம் நாள் ஆரம்பமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் ஈகச்சுடரேற்றி நடத்தப்படும் நினைவேந்தலுடன் முடிவுக்கு வரும்.
‘முள்ளிவாய்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. ஒற்றுமையாக – அனைவரும் இணைந்து நினைவேந்தலை கடைப்பிடிக்க வேண்டும். மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்காக எல்லோரையும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்மஈடேற்றத்திற்காக – ஆத்மசாந்திக்காக ஆலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். நினைவேந்தல் வாரத்தில் வன்முறைகளையும் – களியாட்டங்களையும் தவிர்த்து, ஒவ்வொரு தமிழனும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.