வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 லட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளன.
முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப் பட்ட வீடுகளை அமைப்பதற்குக் கொழும்பு அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க் கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு வேலைத்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வீட்டுக்கு 1.5 மில்லியன் ரூபா எனும் அடிப்படையில் 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குப் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைச் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் 6 ஆயிரம் முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மறுவாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காகச் சிமெந்துக் கற்கள் பாவித்து நிர்மாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகள் அமைப்பதைச் செயற்படுத்தும் முறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கில் 60 ஆயிரம் முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு வீடு 21 லட்சத்தில் (2.1 மில்லியன்) அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகள் முன்னோடியாக அமைக்கப்பட்டன. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தற்போது 6 ஆயிரம் வீடுகளை, தலா 15 லட்சம் ரூபாவில் (1.5 மில்லியன்) அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.