மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் திகதி இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கடந்த இரு வருடங்களாக தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டித்து வருகிறோம். அந்த வகையில் இவ்வருடமும் அனுஷ்டிக்கவுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் 12 ஆம் திகதி நினைவு ஏந்தல் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 13 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும். நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற படுகொலை நினைவு நாள் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும்.
இதேவேளை, நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற குமுதினி படகுப் படுகொலை 15ஆம் திகதியன்று நினைவு கூரப்படுவதுடன் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்படும்.
இறுதியாக மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு ஏந்தல் அனுஷ்டிக்கப்படும். இந்நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை தாங்குவார் என அவர் மேலும் தெரிவித்தார்.