ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, இலங்கையின் சில பகுதிகளில் எச்.ஐ.வி. நோயை ஊசி மூலம் பரப்பி வருவதாக வதந்திகள் வெளியாகியுள்ளதாகவும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரத்த பரிசோதனை மேற்கொள்ள இரவு நேரங்களில் சிலர் வீடுகளுக்கு வருவதாகவும் அவர்கள் எச்.ஐ.வி. வைரஸை ஊசி மூலம் செலுத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் போலியாக தகவல் பரிமாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான போலி தகவல்கள் மூலம் யானைக்கால் நோயை தடுப்புக்காக இரத்த பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
இந்த போலியான தகவலை வெளியிட்டமை தொடர்பில் யாரும் இனங்காணப்படாத நிலையில், இதன் காரணமாக சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த தகவல் வெளியிடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.