நாகவிகாரை ஓய்வு விடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனைக் கண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அதிர்ச்சி அடைந்ததோடு சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய மாநகரசபையினரையும் கடிந்துகொண்டார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் மற்றும் குளத்திலிருந்து கடலிற்குச் செல்லும் வடிகால் என்பன ஆளுநரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் , படையினர் , மாநகர சபையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யப்பட்டது. இதன்போது நீர்வெளியேறும் வாய்க்காலைப் பார்வையிட்ட ஆளுநர் கழிவுகள் தேங்கி கிடப்பதோடு அதிக துர்நாற்றம் வீசுவது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறித்த கழிவுகள், கழிவு நீர் அனைத்தும் ஆரியகுளம் நாகவிகாரை ஓய்வு விடுதியில் இருந்து மதில் உடைக்கப்பட்டு வாய்க்காலிற்குள் திருப்பப்பட்டுள்ளதனை நேரில் காண்பித்த ஊடகவியலாளர்கள் இதுவே மேற்படி செயலிற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டியதோடு இதனை பல முறை சுட்டிக்காட்டியும் எவரும் நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். இதுவே சாதாரண பொதுமகன் செய்திருப்பின் மாநகரசபை லட்சக் கணக்கில் குற்றப்பணம் அறவிட்டிருப்பர் இதனையும் ஆளுநரே சீர் செய்ய வேண்டும் எனக் கோரினர்.
அதனை சென்று நேரில் பார்வையிட்ட ஆளுநர் இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது. எனவே இது சுகாதார முறைக்கு முரணானது. இதற்கு மாநகரசபை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாததும் அவர்களின் தவறுதான். எனவே குறித்த விடயத்திற்கு மாநகரசபை உடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.