கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.
1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபரை 1 சி பாடசாலையான இராமநாதபுரம் பாடசாலைக்கு மாற்றிவிட்டு வட்டகச்சி மகா வித்தியாலயத்திற்கு அதே அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வு மூலமே தகுதியானவர் தெரிவு செய்யப்பட்டு நியமிக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1ஏபி பாடசாலைக்கு அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள்தான் அதிபராக இருக்க வேண்டும் ஆனால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் உள்ள போதும் அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை மாவட்டக் கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு 1 ஏபி பாடசாலைகளான கிளிநொச்சி மகா வித்தியாலம், பாராதிபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது கூறப்பட்ட காரணம் இவை 1ஏபி பாடசாலை என்றும் எனவே அங்கு அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள்தான் அதிபராக இருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வட்டகச்சி மகா வித்தியாலய அதிபர் நியமனத்தில் ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக் கேள்வி எழுப்பும் கல்விச் சமூகம் கிளிநொச்சி கண்டாவளை கோட்டத்தில் அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் பாடசாலை எதுவும் வழங்கப்படாது கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமாரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
வட மாகாண கல்வி அமைச்சில் இருந்து அனுப்பட்ட கடிதத்திற்கு அமைவாக பாடசாலைகளை பொறுப்பேற்குமாறு பணித்திருக்கின்றோம் என்றார்.
இதனையடுத்து வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களினால் முறையற்ற விதத்தில் வடக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுவது பற்றி கேட்ட போது.
அது தொடர்பில் அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மறுமொழி வழங்குவார் என்றும் தெரிவித்து தொலைபேசி அழைப்பை துண்டித்துக்கொண்டார்.
தொடர்ந்து வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரனிடம் மேற்படி அதிபர் நியமனம் தொடர்பில் வினவிய போது
நடைமுறைக்கு மாறாக இந்த அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டதில் எனக்கு தொடர்பில்லை என்னால் விண்ணப்பம் கோரப்பட்டு வழங்கப்படவில்லை இவை நேரடியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் நேரடியான அறிவுறுத்தலுக்கு அமைவாகவே வழங்கப்பட்டுள்ளது.
அவர்களது நியமனக் கடிதத்திலும் கூட இந்த திகதிய இந்த இலக்கமுடைய வடக்கு கல்வி அமைச்சரின் கடிதத்திற்கு அமைவாகவே நியமனம் வழங்கப்படுகிறது என்றே எழுதப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்