இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கை ; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

ஊவா மாகாணத்தில் நிலவும் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இந்திய ஆசிரியர்களை வரவழைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வேலைவாய்ப்புக் கோரி வடக்கு, கிழக்கில் தொடர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளில், விஞ்ஞான, கணிதப் பட்டதாரிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் மாத்திரமே விஞ்ஞான, கணிதப் பிரிவு இயங்குவதுடன், அங்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இந்த நிலையில், வேறு மாகாணங்களுக்கு சென்று உயர் தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் கல்வியைத் தொடர முடியாமல், ஊவா மாகாண மாணவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் பட்சத்தில் அவர்களுக்கு மேலதிக பயிற்சியளிக்க வேண்டும் என ஊவா கல்வி அபிவிருத்தி சங்கம் வலியுறுத்தியது.

Related Posts