வடமாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு கீழ் உள்ள 6 வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு ஒப்புதல் அழித்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 110 வைத்தியசாலைகளில் 6 வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதற்காக மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு கொழும்பு சுகாதார அமைச்சுக்கு அதைச் சமர்ப்பித்திருந்தோம். விரைவில் அதற்கான எழுத்து மூலமான அனுமதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமர்ப்பிக்கப்பட்ட எமது தீர்மானம் நீண்ட நாள்களாக அங்கு தேக்கத்தில் இருப்பது தொடர்பில் கடந்த வாரம் கொழும்பு சுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கேள்வி எழுப்பினாம். அதனையடுத்து குறித்த விடயத்துக்கு வாய் மூலமான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைகளுக்கான தரமுயர்த்தல் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அனுமதி எழுத்தில் கிடைக்கும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வடக்கின் 6 வைத்தியசாலைகளான வவுனியா மாவட்ட வைத்தியசாலையானது மாகாண வைத்தியசாலையாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் மல்லாவி வைத்தியசாலைகள் தள வைத்தியசாலைகளாகவும், பருத்தித்துறை வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலையாகவும் தரம் உயர்த்தப்படுவதோடு மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளும் தள வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டு அவற்றுக்கான வளங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.