மாணவியிடம் காதலை தெரிவித்தார் ஆசிரியர்!: பாடசாலை கல்வி செயற்பாடுகள் பாதிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில், மாணவியின் உறவினர்கள் குறித்த ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பிற ஆசிரியர்களுடனும் முரண்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பளித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவ்வூரவர் அவர்களை பாதுகாப்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த ஆசிரியரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (04) ஆஜர்ப்படுத்தியதை அடுத்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் ஆசிரியரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் குறித்த பாடசாலைக்கு கற்பிப்பதற்குச் செல்ல முடியாது என, தெரிவித்து விட்டனர். இதனால் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

ஆசிரியர்கள் பெரும்பாலும் வெளியிடங்களில் இருந்து சென்று கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளனர். அவர்கள் அங்கு செல்லாமையால் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts