இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
சுகாதார தொழிற் சங்கங்கள், போக்குவரத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதுடன், மாணவர் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தமாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்க தரப்பில் இருந்து ஏதாவது யோசனைகள் முன் வைக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் தீர்மானிக்கப்படுவது அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்து பேசியதன் பின்னரே என்று அவர் கூறினார்.
இதேவேளை வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் பல பிரிவுகளின் சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன், பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்ற பணிப் புறக்கணிப்பில் நூற்றுக்கு 50 வீதமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.
பல பாடசாலைகளில் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.
எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்தப் போராட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
இதேவேளை இன்று காலை வழமை போன்று அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், தற்போது புகையிர போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.