சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டாதெனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இதேவேளை இவ்வேலை நிறுத்தம், மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து சிறுநீரக சிகிச்சை நிறுவனங்கள், நாடு முழுவதுமுள்ள விபத்துப்பிரிவுகள் என்பவற்றை பாதிக்காது என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீன் டி சொய்சா அறிவித்துள்ளார்.
இந்த அடையாள வேலைநிறுத்தம் நாளை 06 ஆம் திகதி காலை 8 மணிக்கு நிறைவடையும். எனினும் எதிர்வரும் 09 ஆம் திகதிக்குள் சைட்டம் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடத்து ஏனைய துறைகளையும் உள்ளடக்கியதாக இவ்வேலை நிறுத்தம் பெரும் பூதாகரமாக உருவெடுக்கும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.