“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
“தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு இணைப்பைக் கோருகின்றோம். அதன் மூலமே, எமது தமிழ் பேசும் சந்ததி பாதுகாக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டுத் திடலில், நேற்று (01) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து மக்களையும் நாங்கள் நேசிக்கின்றோம். அவர்களுடன் சமதானமாக வாழ விரும்புகின்றோம். அவர்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு நீதி நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதேவேளை நீதியும் நியாயமும் எங்களுக்குரியது.
அந்த வகையில், முஸ்லிம் தலைமைகளும் மக்களும், தமிழ் தலைமைகளும் மக்களும் ஒன்றுகூடி பேசி, இரு பகுதியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல முடிகளுக்கு வரவேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழும்போதே, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அநியாயங்களும் இல்லாமல் போகும். அப்போதுதான், நாம் அநீதிகளைத் தடுக்கலாம், விடுக்கலாம். மாற்றியமைக்கலாம். அதிகாரப்பகிர்வு வந்த பிறகு, நாங்கள் பலவாறு செயற்படலாம்.
முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஒற்றுமையாக பிரச்சினையை தீர்க்க வேண்டும். அந்த அழைப்பை நான் இச்சந்தர்ப்பத்தில் விடுகின்றேன்” என்றார்.