வெளிநாட்டு முகவர் ஒருவரினால் புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஈரான் எல்லைப்பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கில் முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்டிருக்கின்றனர்.
வெவ்வேறு நாடுகள் ஊடாக பயணித்த அவர்கள் இறுதியாக டிசம்பர் 19ஆம் திகதி குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு தாம் ஈரான் நாட்டில் இருப்பதாகவும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
பின்னர் இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் எந்தத் தொடர்பும் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுத் தூதரகங்களை நாடிய உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் ஈரான் நாட்டு எல்லைப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறவினர்களுக்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் பின்னரே குறித்த இருவரும் உயிரிழந்திருக்கின்றமை குடும்பத்தாருக்கு தெரியவந்திருக்கிறது.
சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுப் போராளியாக இருந்த உடுப்புக்குளத்தைச் சேர்ந்த ஈழதர்சன் என்றழைக்கப்பட்ட பேரம்பரம் மைதிலிபாலன் என்றும் மற்றையவர் செம்மலையைச் சேர்ந்த விஜயகுமார் பிரசாந் என்றும் தெரியவந்திருக்கிறது.
போலி முகவர்கள் பண ஆசைக்காக அப்பாவிஉயிர்களை தொடர்ந்தும் பலியெடுத்துவருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுவருகின்றனர்.
அண்மையில் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனும் வெளிநாட்டு முகவர்களால் இடர்நிறைந்த பாதைகளால் அழைத்துச்செல்லப்பட்டபோது உயிரிழந்திந்தமையும் குறிப்பிடத்தக்கது.