போத்தல்களில் பெற்றோல் விற்ற இருவருக்கு மல்லாகம் நீதவான், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தார்.
பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.இதன்போது, மல்லாகம் பகுதியில் போத்தல்களில் பெற்றோலை அடைத்து விற்பனை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர், மல்லாகம் நீதிமன்றில் நேற்று (24) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.