கனியவள கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு தொழிற்சங்க ஓன்றியம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனியவள மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என பிரதமர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக கனியவளக் கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தொழிற்சங்க போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்த அவர், நேற்று நள்ளிரவு முதல் வழமை போன்று பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.