வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம் செய்திருந்தார்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய அவர் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை தனக்கு வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடாக வழங்குமாறும் தன்னாலான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் ஒருவாரத்தில் இவ் விபரங்களை கையளிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தெரிவித்திருந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து வட மாகாண சுகாதார அமைச்சரிடம் 115 பேரின் விபரங்களை கையளித்திருந்தனர்.
குறித்த விபரங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் தாம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்தார்.