கிளிநொச்சி அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களத்தின் செயற்பாடுகள்: அரச அதிபர்

வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மாவட்டச்செயலகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத் திணைக்களத்திற்குரியவை என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை பெறவேண்டும் என்பதோடு, தங்களின் நடைமுறைக்கு அமைவாகவே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் 1992 ஆம் ஆண்டு 58 இலக்க தத்துவ உரிமம் மாற்றம் சட்டத்திற்கு அமைவாக அரச காணிக்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது அதன்படி செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது வனவளத் திணைக்களம் தடையாக இருக்கிறது என என்னிடம் முறைப்பாடுகளைச் செய்கின்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரியிடம் நான் கேட்டபோது ”5\2001 சுற்று நிருபத்திற்கு அமைவாக அனைத்து அரச காடுகளும், மற்றும் எதிர்காலத்தில் வனமாக மாறக் கூடிய நிலங்களும் வனவளத்திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம் என சுந்தரம் அருமைநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts