இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!

கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.

முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

நான் ஒரு பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர்.

மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார். ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன. அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.

இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார். அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.

அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன். அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன்.

கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன். இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன். நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை.

குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன். இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள். இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே.

நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன் அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி

http://www.e-jaffna.com/archives/81316

Related Posts