வடக்கு மாகாணத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 308 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், 294 பேரே இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் போட்டிப் பரீட்சை நடத்தாது, நேர்முகத் தேர்வை நேரடியாக நடத்தி நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரிகளிடமிருந்து மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு 456 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. விண்ணப்பங்கள் ஆராயப்பட்டன. விண்ணப்பித்த சிலர், கணிதம் மற்றும் விஞ்ஞானம் இரண்டு பாடங்களுக்கும் தனித் தனியே விண்ணப்பங்களை அனுப்பியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏதாவது ஒரு பாடத்திற்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், இரண்டு பாடங்களுக்கும் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் ஒரு பாடத்திற்குரிய விண்ணப்பம் மாத்திரமே ஏற்கப்பட்டது.
பாடங்களுக்கான வெற்றிடம் 308 ஆகக் காணப்பட்ட நிலையில், 294 பேர் மாத்திரமே விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
வெற்றிடங்களை விடக் குறைந்தளவிலானோர் விண்ணப்பித்துள்ளமையினால் போட்டிப் பரீட்சையை நடத்தாமல், ஆளுநரின் அனுமதியைப் பெற்று நேர்முகத் தேர்வை நேரடியாக நடத்த மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு பரிந்துரைத்து, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.
294 விண்ணப்பதாரிகளினதும் விண்ணப்பங்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாண கல்வி அமைச்சு கோரிய தகுதிகள் உள்ளனவா என்று ஆராயப்படுகின்றது. தகமை அற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று கூறப்பட்டது.