தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது.
அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் தேடியராந்து பார்ப்பதற்காக, நியமிக்கப்பட்ட குழுவானது தங்களுடைய பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது என்றும் அவ்வமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் எதிர்கால நடவடிக்கை குறித்த கலந்துரையாடல், இவ்வாரம் இடம்பெறவுள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் ஆர்.எம்.எஸ் சரத் குமார தெரிவித்தார்.
இராணுவத்தினால் கையளிக்கப்பட்ட 37.7 கிலோகிராம் நிறையுடைய, தங்கம் தம்வசம் இருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 07ஆம் திகதி முதல், 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இராணுவத்தினர் 28 தடவைகள் தங்க ஆபரணங்களைக் கையளித்துள்ளனர். அதன்பெறுமதி, ஒரு மில்லியன் ரூபாயாகும்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையானது, இந்தத் தங்க ஆபரணங்களின் நிறை மற்றும் பெறுமதியை மதிப்பிட்டுள்ளது.
தங்கப் பொருட்களை பொறுப்பேற்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இராணுவ அதிகாரி மற்றும் மத்திய வங்கியின் கணக்காளர் முன்னிலையில், தங்கப்பொருட்களின் நிறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதமொன்றும் விநியோகிக்கப்பட்டது என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, இராணுவத்தினரால் கடந்த வருடம் ஒப்படைக்கப்பட்ட 6003.132 கிராம் நிறையுடைய பொதியொன்றின் பெறுமதி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் மதிப்பிடவில்லை என்றும் மத்தியவங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.
“இந்தப் பொதியானது, பொறுப்பேற்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. தங்க ஆபரணங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பொதியானது, மத்திய வங்கியின் பாதுகாப்பிலேயே இன்னுமிருக்கின்றது.
அத்துடன், கணிசமான அளவு தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள், இராணுவத்தின் வசமே உள்ளன” என்றும் பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் ஆர்.எம்.எஸ் சரத் குமார மேலும் தெரிவித்தார்.
ஆபரணங்களில் ஒரு பகுதி, தங்களுக்கு உரித்துடையதாகும் என, பாதுகாப்பு அமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, தங்க ஆபரணங்களின் சட்டரீதியான உரிமையை ஆராய்ந்து, அவையாவும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக, கடந்த அரசாங்கத்தின் போது அறிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2,377 பேர், சட்டரீதியான உரித்துடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள், யுத்தக்காலத்தில் அந்த தங்க ஆபரணங்களை, விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைத்திருந்திருந்தனர் என்றும், அன்றைய அரசாங்கம் அடையாளம் கண்டிருந்தது.
எனினும், அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபமொன்றின் போது, அவ்வாறான சட்டரீதியான தங்க ஆபரணங்களில், உரிமையாளர்கள் எனக் கூறப்பட்ட 25 பேரிடமே கையளிக்கப்பட்டன என்றும், மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஊடாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விக்களுக்கு அளித்துள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.