மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கவுள்ள வடக்கு, கிழக்கு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத காலப் பகுதியில் சூரியன் வானில் உச்சம் கொடுப்பது வழமையான விடயம்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றமைக்கு மழை வீழ்ச்சி குறைவாக இருந்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர், பெருமளவு மேற்பரப்பு நீர் ஆவியாகிவிட்டது.

மேலும் அதிகரித்த கட்டுமானத்தால் கட்டிடங்கள் உறிஞ்சி வெளிவிடும் வெப்பத்தின் அளவு கூடவாகவுள்ளதால் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவு குறைவடைகின்றது. இதனால் இம்முறை வெப்பத்தை அதிகளவில் உணரமுடிகிறது.

இது இவ்வாறு இருக்க கடந்த மார்ச் பிற்பகுதியில் இந்தியாவின் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கதிர்வீச்சு அதிகரித்ததன் காரணமாக கடுமையான அனல் காற்று வீசியது.

இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புக் காரணமாக மரணங்கள் பல ஏற்பட்டன. கடந்த வருடம் இவ்வாறு மூவர் வடக்கில் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

தற்போதுள்ள வளிமண்டல நிலையைப் பொறுத்தவரை மழை பொழிவு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமான உள்ளது.

இந்த இடியுடன் கூடிய மழையாகவும் பிற்பகல் இரண்டு முதல் இரவு ஏழு மணிவரையும் அல்லது காலை ஏழு மணிக்கு முன்னர் காணப்படும் மழையாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் ஆவியாவதைத் தவிர்க்க விவசாயிகள் மற்றும் கட்டிடம் அமைப்போர் முற்பகல் 10 மணி முதல் நான்கு மணி வரை நீரை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts