யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களில் ஒரு மாணவரான விஜயகுமார் சுலக்சனின் தந்தையான சின்னத்துரை விஜயகுமார் இடமாற்ற மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் தன்னை ஒரு இடைபுகு மனுதாரராக சேர்க்குமாறு சட்டத்தரணி மொகான் பாலேந்திரா உடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆதரித்து சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் குடும்பத்தினரே மனுவை தாக்கல் செய்தபோதிலும் இரு மாணவர்கள் சார்பில் முன்னிலையாவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பத்தை கேட்டறிந்த நீதிபதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பு ஆட்சேபனைகளை எதிர்வரும் மே 29 ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்குமாறு கோரினார்.
இதேவேளை சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து பொலிஸாரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் தமக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக முன்வரவில்லை எனவும் கொழும்பிலிருந்து வரும் சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.