முல்லைத்தீவு கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த குழுவினர் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பார்வையிட்டனர்.
முல்லைத்தீவில் – கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று முப்பத்து ஆறாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தினர் வசமுள்ள 138 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினர் கேப்பாபுலவு மக்களை சந்தித்துள்ளனர்.
இதன்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகள் விடுவிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தாது சொந்த வருமானத்தில் தமது தேவைகளை பூர்த்திசெய்வோம் என கேப்பாபுலவு மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்றுவிட்டு நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.