யாழில் 8 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர வேண்டி உள்ளன மாவட்ட செயலக அறிக்கையில் தகவல்

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 295 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 116 பேர் இன்னமும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் உள்ளனர் என யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த மாதம் 31 ஆம் திகதி வரையான யாழ். மாவட்ட மீள்குடியமர்வு பற்றிய யாழ். செயலக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் தொடர்ந்தும் இராணு வத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன.

இந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
யாழ். மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் புதிதாக எந்தவொரு இடத்திலும் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி யாழ். மாவட்டத்துக்கு வந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெல்லிப்பழையில் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். இருப்பினும் இந்தப் பகுதியில் இதுவரை  மக்களை முற்றாக மீள் குடியமர்த்த முடியவில்லை.
யாழ். மாவட்ட செயலகத்தின் கடந்த வருட அறிக்கையில் 10 ஆயிரத்து 152 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 840 பேரை மீளக்குடியமர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறிப்பிடத்தக்க குடும்பங்களை மட்டுமே இதுவரை மீள்குடியமர்த்த முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்னமும் 8 ஆயிரத்து 295 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 116 பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வெளியிடங்களில் தங்கியுள்ளனர் என்று மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

Related Posts