விமல் மீண்டும் மறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது பிணை கோரிய விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விசாரணை தொடர்பான சட்டரீதியான மற்றும் சம்பவ ரீதியான விடயங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அவரால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, விமல் வீரவங்ச சிறைச்சாலையினுள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

எனினும் அவர் அண்மையில் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ள நிலையில், நேற்று அவர் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை கோட்டை நீதவான் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது

அந்த பிணை கோரிக்கையை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோட்டை நீதிவான் அறிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உடல்நிலை தேறியிருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, விமல் வீரவன்ச தொடர்பிலான விசாரணையை தற்போது நிறைவு செய்துள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் விசாரணை தொடர்பான மூல ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்து அறிவுத்தல்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts