ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்: வடக்கு முதல்வர்

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக வடக்கு மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி விளக்கியதாகவும், வடக்கு மாகாண மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தம்முடன் கலந்தாலோசிக்காது நடைமுறைப்படுத்தியமை பிழையென சுட்டிக்காட்டியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts