நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பொருளாளராக விஷால் அணியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பிரபு தேர்வு செய்யப்பட்டார். கே.ஈ.ஞானவேல்ராஜா செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுதவிர, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களது விவரம் வருமாறு,
சுந்தர்.சி, ரா.பார்த்திபன், பாண்டிராஜ், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலி கான், எஸ்.எஸ்.துரைராஜு, ஆர்.கே.சுரேஷ், ஜம்ஷத் @ ஆர்யா, ராமசந்திரன்.எஸ், ஜெமினி ராகவா, அபினேஷ் இளங்கோவன், ஏ.எல்.உதயா, எம்.ஜாபர், பிரவீன்காந்த், மனோஜ்குமார், பி.எல்.தேனப்பன், எஸ்.வி.தங்கராஜ், கே.பாலு (கே.பி.பிலிம்ஸ்), எம்.எஸ்.அன்பு, எஸ்.எஸ். குமரன், டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட 21 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்த தேர்தலை நடத்திய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் விரைவில் பதவியேற்க உள்ளனர்.
வெற்றிக்கு பின்னர் பேசிய விஷால், தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த 2 ஆண்டுகள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலமாக அமையும் என்று கூறினார். இந்த 2 ஆண்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதவியேற்றதுடன் முதல் வேலையாக தயாரிப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக இரண்டு முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் திருட்டு விசிடி மற்றும் பைரேசி விவகாரங்களில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.