சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால், சர்வதேசத்திற்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் ஆரம்பமான ‘யொவுன்புர’ இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த நிலைமையிலிருந்து நாம் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றோம். எமது நாடு இவ்வாறான அடிபணிதல்களிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். அதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
இந்த நாடு தற்போது இருக்கின்ற பொருளாதார சுமையிலிருந்து மீட்டெடுத்து, நாட்டின் பாரிய கடன்களை தீர்த்து புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்” என்றார்.