பாடசாலை மாணவர்களுக்கான வெள்ளை நிறச் சீருடைக்கு பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதற்காக, நான்கு அல்லது ஐந்து நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தனது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை, பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வெள்ளைநிறச் சீருடையை அணியும் பாடசாலைகள், இலங்கையில் மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை நிறச் சீருடைகள், விரைவில் அழுக்கடைந்து விடுவதால், மாணவர்களில் பெரும்பாலானோர், விளையாட்டுக்களில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்களுடைய சீருடையை, அழுக்கடையாமல் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.