கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள், 1,75,000 பேருக்கு டெப் கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு முதலாவதாக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் குறிப்பாக கணித பாடத்தில் சித்தியடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையானது நாட்டின் கல்வித் துறையின் சிறந்த முன்னேற்றத்தினையே காட்டுவதாகவும், எதிர்பார்த்ததை விட விரைவாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுத் தர முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையில் அர்ப்பணிப்புடன் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் உயர்தரத்திலும் சிறந்த வெற்றிபெற வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
28,000 ஆசிரியர்களுக்கும் ‘டெப்’ கணனிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இம்முறை சாதாரண தரத்தில் சித்திபெற்று உயர்தரம் செல்லும் மாணவர்களிலிருந்தே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.