தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா பணம் பறிபோயுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது பால் சேகரிப்பாளர் வீட்டுக்கு பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்து வேளையில் டொல்பின் ரக வெள்ளை வானில் வந்த சிலர் லொறிக்கு குறுக்காக வானினை நிறுத்தி தாங்கள் பினேன்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், இந்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால் இந்த லொறியினை கொண்டு செல்ல வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து லொறி திறப்பை எடுத்தாகவும் பின் சாரதி கொண்டு வந்த பணம் பையினை எடுக்கும் போது கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தி, பின் தலையில் கட்டையொன்றினால் தாக்கிவிட்டு லொறியினையும் பணத்தினை எடுத்து சென்றுள்ளனர்.
அதன்பின் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் விசாரணையின் பின் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
லொறியினை எடுத்து சென்றவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர்வரை லொறியினை கொண்டு சென்று பணத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு லொறியினை வீதியோரத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.
கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட பணம் வட்டகொடை பசும் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வெள்ளை வானில் வந்தவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் போல் உடை அணிந்திருந்ததாகவும் சுமார் ஐந்து பேர் வரை வேனில் இருந்தாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.