கிளிநொச்சி மாவட்டத்தில் ராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வட்டக்கச்சி பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி சிறிது தூரம் ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து வாகனங்களில் கிளிநொச்சி நகருக்கு வருகை தந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் மகஜர்கள் மாவட்ட அரச அதிபரிம் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும் விவசாயிகள், சிவில் அமைப்புக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பாட்டாளிக்கு பாடை கட்டாதே, பண்பட்ட நிலத்தை பாழாக்காதே, இளைஞர்கள் தெருவில் ராணுவம் பண்ணையில் பண்ணையினை மீண்டும் விவசாயத் திணைக்களத்திடம் ஒப்படை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.